Print this page
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 11:13

சந்திர மாதத்தின் 12வது நாள் முழுநிலவும், 27வது நாள் சூரிய கிரகணமும் ஏற்படுமா?

Rate this item
(0 votes)

بسم الله الرحمن الرحيم

உங்களின் கனிவான சிந்தனைக்கு!

அன்பான சகோதர சகோதரிகளே !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......

சந்திர மாதத்தை முஸ்லிம்கள் அறிந்து கொள்ள முடியாமல் ஒரே மாதத்தை பல கிழமைகளில் ஆரம்பித்து வருவதை பல்லாண்டுகளாக நாம் பார்த்து வருகின்றோம்.  உலகிற்கு நேர்வழி காட்ட வந்த மார்க்கமான தீனுல் இஸ்லாம் ஒரு தெளிவான நாட்காட்டி முறையை நமக்கு தரவில்லையோ என முஸ்லிம்களே நினைக்கும் அளவிற்கு சந்திர நாட்காட்டி அடிப்படையில் மாதங்களை சரியான நாளில் துவங்குவதில் முஸ்லிம்கள் திணறி வருவதை நாம் அனைவரும் அறிந்தே வைத்துள்ளோம். எனவே இந்த பிரசுரத்தின் வாயிலாக பிறை விஷயங்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறோம்.

வல்ல அல்லாஹ் தனது இறுதி வழிகாட்டல் நூலான அருள்மறை குர்ஆன் மூலம் மாதங்களின் எண்ணிக்கை 12 என்பதை திட்டவட்டமாக தெளிவுபடுத்தி விட்டான். அது போல இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களும் ஒரு மாதம் என்பது 29 தினங்களை கொண்டதாகவோ அல்லது 30 தினங்களை கொண்டதாகவோ இருக்கும் என்று தெளிவுபடுத்தி விட்டார்கள். ஆக ஒரு மாதம் என்பது 29 நாட்களோ அல்லது 30 நாட்களாகத்தான் இருக்க வேண்டும் என்பது இறைவன் வகுத்துள்ள நியதியாகும்.

இந்த இறை சட்டத்திற்கு மாற்றமாக மனிதன் தன் விருப்பத்திற்கு வரையறுத்து 28, 29, 30, 31 என பல நாட்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உருவாக்கிய கிரிகோரியன் (Gregorian) ஆங்கில கிறிஸ்துவ நாட்காட்டி பல்வேறு குளறுபடிகளையும், தவறுகளையும், ஒரு மாதத்திற்கான நாட்களை கூட்டி குறைத்துக் கொள்ளும் அசாதாரண சூழ்நிலைக்கு உள்ளாவதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

ஆனால் அத்தகைய குளறுபடிகளோ, தவறுகளோ ஏற்படாத வண்ணம் வல்ல அல்லாஹ் சந்திரனின் படித்தரத்தை மக்களுக்கு மிகத் துல்லியமாக ஏற்படுத்தி அதை மனிதகுலத்திற்கு சரியான நாட்காட்டியாகவும் அமைத்து விட்டான். அதனால்தான் வளர்பிறைகள், முழுநிலவு, தேய்பிறைகள், உர்ஜூஃனில் கதீம், சந்திரனின் ஒளியை பார்க்க முடியாத சங்கமம், சந்திர கிரகணம், சூரிய கிரகணம் என்று பல அத்தாட்சிகளை சந்திரனில் ஏற்படுத்தி மனிதகுலத்திற்கு அந்த நாட்காட்டியின் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் வல்ல அல்லாஹ் தெளிவுபடுத்திக் கொண்டேயிருக்கிறான்.

இந்நிலையில் சந்திர கிரகணம் என்பது முழுநிலவு நாளிலும், சூரிய கிரகணம் என்பது மாதத்தின் பிறை தெரியாத கடைசி தினத்திலும்தான் ஏற்படும் என்பதைக்கூட நம்மில் பலர் அறியாமலேயே இருக்கின்றனர் என்பதை நினைத்து மிகமிக வருந்துகிறோம்.

மேலும் இந்த விஞ்ஞான யுகத்தில் துல்லியமான கணக்கு முறை எனக்குத் தெரியாது என்று வாதித்தாலும், அவருக்கும் இஸ்லாம் பிறை விஷயத்தில் தெளிவான தீர்வை அளித்துள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் மாதம் எத்தனை தினங்களை கொண்டது என்பதை அறிய வேண்டுமானால், அவர் சந்திரனின் அனைத்து படித்தரங்களையும் புறக்கண்ணால் தினமும் பார்த்து வரவேண்டும் என்பதே!.

அதாவது மாலையில் சூரியன் முழுமையாக மேற்கு வானில் மறையும் நேரத்தில், பிறையை நாம் பார்க்கையில் பிறை அரை வட்ட அளவில் நம் தலைக்கு மேலே (சுமார் 86-90டிகிரியில்) நிலைபெற்றிருந்தால் மாதத்தின் கால்பகுதியை நாம் அடைந்துவிட்டோம் என்பதை அவர் அறிந்து கொள்ளலாம். அரை வட்ட அளவில் 90டிகிரி கோணவிகிதத்தில் நாம் பார்க்கும் பிறை இருந்தால் 7 அல்லது 8 வது நாளை குறிப்பதை தெளிவாக அவர் புரிந்து கொள்ளலாம்.

அதே போல், ஒருநாள் மாலை சூரியன் மேற்கில் மறைந்து கொண்டிருக்கும் வேளையில், முழு வட்டமாக சந்திரன்  காட்சி அளித்துக்கொண்டே கிழக்கு வானில் உதயமாகிக் கொண்டிருக்கும். அன்றைய தினம் மாதத்தின் அரைப்பகுதியை நாம் அடைந்துவிட்டோம் என்பதை அறிவிப்பதற்காக சந்திரன் முழு நிலவாக அன்று வானில் காட்சி தருகின்றது. ஒரு மாதத்தில் முழுநிலவு நாள் பெரும்பாலும் 14வது அல்லது 15வது நாளில் வரும்.

முழுநிலவு நாள் வரை சந்திரனில் ஒளி அடுக்கடுக்காக கூடி கொண்டே வந்து அதே முழுநிலவு நாளில் இருந்து மீண்டும் சந்திரனின் ஒளி அடுக்கடுக்காக குறைய ஆரம்பிக்கும். இவ்வாறு தேய்ந்து வளரும் பிறைகளை தொடர்ந்து நாம் புறக்கண்ணால் பார்த்து கொண்டே வந்தோமானால், மாதத்தின்  கடைசி நாளுக்கு முந்திய நாளின் பிறையானது உலர்ந்து வளைந்த பழைய பேரீத்தம் மர பாளையை போல் ஆகிவிடும். இதைத்தான் உர்ஜூஃனில் கதீம் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் 36:39 வசனத்தில் விவரிக்கின்ற பிறையின் படித்தரமாகும்.

மாதம் முப்பது நாட்களை கொண்டதாக இருந்தால் அல்லாஹ் அல்குர்ஆனில் விவரிக்கின்ற உர்ஜுனில் கதீம் மாதத்தின் 29 வது நாள் சூரியன் உதிப்பதற்கு முன்பாக ஃபஜ்ர் வேளையில் கிழக்கு வானில் காட்சியளிக்கும். அதுபோல் மாதம் இருபத்தொன்பது நாட்களாக இருந்தால், 28ம் நாளில் தான் உர்ஜூஃனில் கதீம் கிழக்கு வானில் தென்படும்.

குறைந்தபட்சம் ஒருவர் அந்த மாதத்தின் இறுதி நாட்களிலுள்ள தேய்பிறைகளையாவது உற்று நோக்கி வந்தால் தான் அவருக்கு சந்திர மாதத்தைப் பற்றி ஓரளவாவது அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் நாளை நீங்கள் தெரிந்து பெருநாளை சரியான தினத்தில் கொண்டாட வேண்டுமெனில் துல்கஃஅதா மாதத்தின் இறுதி நாட்களின் பிறைகளை சரியாக கணக்கிட்டு வந்திருக்க வேண்டும்.

எனவே மேற்கூறப்பட்ட அடிப்படையில், சந்திரனின் படித்தரங்களை உற்றுநோக்கி நாம் கணக்கிட்டு வந்ததில், எந்த சந்தேகமும் இல்லாமல், கடந்த 15-10-2012  திங்கட்கிழமை அன்று ஹிஜ்ரி 1433 துல்கஃஅதா 29 தினங்களுடன் முடிந்து விட்டது சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியானது. அன்றைய தினம் பிறையை யாரும் புறக்கண்களால் பார்க்க முடியாத (கும்மாவுடைய) நாளாகவும் இருந்தது. அன்று உலகில் எங்குமே பிறை புறக்கண்ணுக்கு தென்படவில்லை. அதன்படி மறுநாள் செவ்வாய்கிழமை (16-10-2012) ஹிஜ்ரி 1433 துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் நாளாகும் (பிறை 1) ஆகும்.

இப்படி பிறையை புறக்கண்ணால் தொடர்ந்து அவதானித்து வந்ததில் கடந்த புதன்கிழமை (24-10-2012) அன்றுதான் துல்ஹிஜ்ஜா மாதத்தின் ஒன்பதாவது நாளாகும். அன்றைய தினத்தில்தான் ஹாஜிகள் அரஃபாவில் தங்கியிருக்க வேண்டும். வியாழக்கிழமை (25-10-2012) துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாவது நாளான (பிறை 10) ஈதுல் அழ்ஹா எனும் ஹஜ்ஜூப் பெருநாள் தினமாகும். துல்ஹிஜ்ஜா மாதத்தின் திங்கட்கிழமை (29-10-2012) முழு நிலவு நாளாகும். அன்றைய தினம்தான் ஹிஜ்ரி 1433 வது வருடத்தின் 14வது நாளாகும்.

ஆனால் துரதிஷ்டவசமாக உலகில் பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை (26-10-2012) அன்றும் சனிக்கிழமை (27-10-2012) அன்றும் துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாவது நாள் என எண்ணிக்கொண்டு ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடினார்கள்.

எனவே வெள்ளிக்கிழமை பெருநாள் கொண்டாடியவர்களுக்கு திங்கட்கிழமை (29-10-2012) துல்ஹிஜ்ஜா பிறை 13 ஆகவும், சனிக்கிழமை பெருநாள் கொண்டாடியவர்களுக்கு திங்கட்கிழமை (29-10-2012) துல்ஹிஜ்ஜா பிறை 12வது நாளாகவும் இருக்கின்றது. 

  •     முழுநிலவு உலகில் எங்காவது பிறை 12வது நாளில் தோன்றுமா?
  •   அல்லது துல்ஹிஜ்ஜாவின் அய்யாமுத்தஷ்ரீக்  நாட்களான 11, 12-ல் முழுநிலவு தோன்றுமா? சிந்திப்பீர் மக்களே!

மேலும் அல்லாஹ்வின் மற்றொரு அத்தாட்சியாக வரும் துல்ஹிஜ்ஜா 29 அன்று அதாவது செவ்வாய்கிழமை (13-11-2012) அன்று யாரும் மறுக்க இயலாத வகையில் சூரிய கிரகணம் ஏற்பட இருக்கிறது - அல்ஹம்துலில்லாஹ். அன்றுதான் சூரியன்-சந்திரன்-பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டிலும் ஒரே மைய அச்சிலும் வருகிறது. சூரிய கிரகணம் என்பது இஸ்லாமிய நாட்காட்டியான பிறை அடிப்படையில் அந்த மாதத்தின் இறுதி நாளில் நடக்கக்கூடிய இறைவனின் அத்தாட்சியாகும். இதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது.

சந்திர மாதத்தின் இறுதியில் இம்மூன்று கோள்களும் அணிவகுத்து ஒரே மைய அச்சில் வருவதால்தான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வு மாதத்தின் இறுதிநாளைத் தவிர்த்து எந்த ஒரு நாளிலும் ஏற்படுவதில்லை. பிறை புறக்கண்களால் பார்க்கமுடியாமல், மறைக்கப்படும் இறுதி நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டு இவ்வருடத்தின் துல்ஹிஜ்ஜா மாதம் 13-11-2012 அன்று செவ்வாய்க்கிழமையோடு முடிகிறது என்பதை மிகமிக திட்டவட்டமாக அல்லாஹ் நமக்கு அறிவிக்கிறான்.

ஆகவே யாரெல்லாம் கடந்த வெள்ளிக்கிழமை (26-10-2012) மற்றும் சனிக்கிழமை (27-10-2012) தினங்களில் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடினார்களோ, அவர்கள் கொண்டாடிய பெருநாள் அடிப்படையில் சூரிய கிரகணம் பிறை 28லும், பிறை 27லும் நடைபெற இருக்கிறது.

எம் அருமை முஸ்லிம்களே தயவுகூர்ந்து சிந்தியுங்கள்! அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றான சூரிய கிரகணம் அவன் நிர்ணயித்த மாதத்தின் இறுதி நாளைக்கு மாற்றமாக ஒருமாதத்தின் 27ம் அல்லது 28ம் நாளிலோ நடைபெறுமா?? சற்று நிதானமாக சிந்தியுங்கள்.

1433ம் ஆண்டின் துல்ஹிஜ்ஜா மாதத்தில், ஹஜ்ஜூப் பெருநாளை வெள்ளிக்கிழமை கொண்டாடியவர்களுக்கு மாதம் 28 நாட்களை கொண்டதாகவும்சனிக்கிழமை கொண்டாடியவர்களுக்கு 27 நாட்களை கொண்டதாகவும் முடிவுறுகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள்?

'மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களை கொண்டதாக இருக்கும்என்ற இறைத்தூதரின் மணி மொழிகளுக்கு முரணாக இந்த துல்ஹிஜ்ஜா மாதம் சிலருக்கு 28 தினங்களிலும், சிலருக்கு 27 தினங்களிலும் முடிகிறதே என்று கவலைப்பட்டு நம்மில் எத்தனை பேர் செய்த தவறை ஒப்புக் கொள்ளும் மன நிலையில் இருக்கிறோம்?

எனவே இந்த சூரிய கிரகண அத்தாட்சியைப் பார்த்து சிந்தித்தால்கூட நாம் உள் உணர்வு பெறலாம். யாநஃப்ஸி யாநஃப்ஸி என்று ஒவ்வொருவரும் தனக்காக வேண்டி பதிலளிக்க இருக்கும் நாளை மறுமையில் நமக்காக பரிந்து பேச இன்றைய ஊர் தலைவர்களோ, நம் குடும்பமோ, உறவோ, நமது ஜமாஅத்தலைவர்களோ வரமுடியாது என்பதை கவனத்தில் கொள்க.

தகுதியில்லாதவர்களையும், பிறை பற்றிய அறிவில்லாதவர்களையும் மார்க்க அறிஞர்களாக நம்பி பிறைவிஷயத்தில் அவர்களை கண்மூடி பின்பற்றும் மக்களுக்கு கீழ்காணும் குர்ஆன் வசனத்தையும் நினைவுபடுத்துகிறோம்.

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், , கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!என்று கூறுவார்கள். எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் (மார்க்க) தலைவர்களுக்கும், எங்கள் (குடும்ப) பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம், அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்என்றும் அவர்கள் கூறுவார்கள். எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக”.  (அல்குர்ஆன் 33:66-68).

இன்றைய சூழலில் நம் முஸ்லிம் சமூகத்தில் புறையோடிப் போய்விட்ட பிறை குழப்பத்திற்கு சந்திர நாட்காட்டி ஒன்றே இறுதித் தீர்வாகும் என்பதை வல்ல அல்லாஹ்வை முன்னிருத்தி பகிரங்கமாக அறிவிக்கிறோம். இன்னும் மார்க்க அறிஞர்கள் என்று தங்களை இந்த முஸ்லிம் சமுதாயத்தில் அடையாளப்படுத்தி மக்களை வழி நடத்திக் கொண்டிருப்பவர்கள் இனிமேலும் சுய கவுரவத்தையும், பெருமையையும் பார்க்காமல், அடம்பிடிக்காமல் திறந்த மனதுடன் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினராகிய எங்களை தொடர்பு கொண்டு பிறைபற்றி முழுவிபரத்தையும் குர்ஆன் சுன்னா அடிப்படையில் கற்று அறிந்து பிறகு பிறை பற்றி மக்களுக்கு தெளிவு படுத்துமாறு அழைப்பு விடுக்கிறோம்.  

அல்லாஹ் மிக்க விளங்கியவன்.

இவண்
ஹிஜ்ரி கமிட்டி - HIJRI COMMITTEE
160/101, North Main Road,       Eruvadi, Tirunelveli,    TamilNadu – 627103,
Phone: 0091 99626 33000    Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   Website: www.mooncalendar.in

Read 1532 times